Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வியாழன், ஜனவரி 14, 2010

பேராண்மை

தமிழில் அவ்வப்போது வித்யாசமான திரைப்படங்கள் வருவதுண்டு மாறுபட்ட திரைக்கதை கதைக்களம் என்று, அப்படிப்பட்ட படங்களில் ஒன்று தான் "பேராண்மை".

ஒரு பெண்கள் கல்லூரியில் இருந்து ஒரு குழு NCC பயிற்சிக்காக வருகிறார்கள், அதில் உள்ள ஐந்து பெண்களுடன் பயிற்சிக்கு செல்லும் இடத்தில் ஜெயம் ரவி அந்த பெண்களுடன் இணைந்து நமது நாட்டின் செயற்கைகோள் ஏவும் முயற்சியை தடுக்கும் நோக்கோடு வரும் அந்நிய சக்திகளை வெற்றி கொள்கிறாரா இல்லையா! என்பதே இந்த படத்தின் கதை.

பழங்குடி இன வகுப்பை சேர்ந்த ஜெயம்ரவி அங்கு அதிகாரியாக உள்ளார் அவரே இந்த பெண்களுக்கு பயிற்சியாளராகவும் நியமிக்கப்படுக்கிறார், இவரது உயர் அதிகாரி பொன்வண்ணன். வடிவேல் உள்ளார் ஆனால் அவருக்கு அதிக வேலை இல்லை. அவரை வடிவேலாக நினைத்து பார்த்தால் இந்த படத்திற்கு அனாவசியமாக தோன்றும் கதாபாத்திரமாக கருதினால் சரியான தேர்வே!

ஜெயம் ரவி கலராக இருப்பதால் பழங்குடி மக்களில் ஒருவராக அவரை ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை ஆனால் அவர்களுடன் இணைந்து அதிக காட்சிகளில் இல்லாததால் அது ஒரு பெரிய விசயமாக தோன்றவில்லை.

NCC பயிற்சிக்கு வரும் கல்லூரி பெண்கள் செய்யும் அட்டகாசம் சி(ப)ல இடங்களில் (இடைவேளை வரை) முகம் சுளிக்க வைத்தாலும் இவை உண்மையில் நடப்பவை என்பதால் மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஒரு சில திரையரங்கில் சும்மாவே கேவலமா கிண்டலடித்து பேசும் பொறம்போக்குகள் வருவார்கள் அவர்களை போன்றவர்களுக்கு வசதியாக இருக்கும்.


பொதுவாக அனைத்து படங்களிலும் மாணவர்கள் தான் இவ்வாறு செய்வதாக காட்டப்படும் இந்தப்படத்தில் மாணவிகளை காட்டி இருக்கிறார்கள். பெண்கள் கல்லூரியில் மற்றும் ஹாஸ்டலில் இதெல்லாம் சகஜம் தான் என்றாலும் புதிதாக பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கும்.

இந்த பெண்கள் ஜெயம் ரவியை பார்க்கும் முதல் காட்சியே கோவணத்துடன் தான், அதிலிருந்து அவரை புரிந்து கொள்ளும் வரை அவரை அவமானப்படுத்தி சிக்கலில் மாட்டி வைத்து படாதபாடு படுத்துகிறார்கள். குறிப்பாக அவரது ஜாதியை வைத்து இவன் எப்படி நம்மை கேள்வி கேட்கலாம் என்று பொய் புகார் செய்து அவரை சிக்கலில் மாட்ட வைக்கிறார்கள். அதற்க்கு அவர்கள் செய்யும் "செயல்" கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது, எரிச்சலையும் வரவைக்கிறது.

ஜெயம் ரவியை எத்தனை பாராட்டினாலும் தகும் சாக்லேட் பாயாக நியூசிலாந்து சுவிச்சர்லாந்து என்று கதாநாயகியுடன் பாட்டுப்பாடி கொண்டு இருந்தவரை காட்டிலாகா அதிகாரி உடையுடன் விரைப்பாக காட்டி அசத்தி விட்டார் இயக்குனர் ஜனநாதன்.

ஜெயம் ரவி எந்த இடத்திலும் தன்னுடைய பங்கை விட்டுக்கொடுக்காமல் செவ்வனே நடித்துள்ளார். NCC பரேடிலும் சரி காடுகளில் இந்த பெண்களை அழைத்துசெல்லும் போதும் சரி ஒரு நேர்மையான திறமையான அதிகாரியின் விரைப்புடன் கலக்கி உள்ளார், பரேடில் அவர் தண்டனை கொடுப்பதும் அதை கேள்வி கேட்பவர்களுக்கு பதில் கூறாமல் அதை அதிகரிப்பதும் கலக்கல், ஆனால் அவர் உடைகள் (அதிகாரி உடை அல்ல) வழக்கமான கதாநாயகனுக்குரிய உடைகளை போல இருப்பது நெருடலாக இருக்கிறது.


பெண்கள் ரவியை கிண்டலடிக்கும் போதும் பின் அவரை புரிந்து பாராட்டும் போதும் கோபத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படையாக காட்டாமல் அதை புறந்தள்ளிவிட்டு தன் வேலையில் கவனமாக இருப்பது ரசிக்கும்படி உள்ளது. சீரியஸ் ஆனா நேரத்தில் பெண்கள் அவர் திறமையை புகழ்ந்து கொண்டு இருக்க இப்ப இதுக்கெல்லாம் நேரமில்ல! என்று தான் ஒரு பொறுப்பான அதிகாரி என்பதை நிரூபிப்பார். இந்தப்படத்தில் ஜெயம் ரவி பேசுவது பெரும்பாலும் ஆங்கில கலப்பு இல்லாத தமிழ் சொற்களே! (நம்ம நிலைமைய பார்த்தீங்களா!).

இந்த படத்தில் வில்லனாக வரும் வெள்ளைக்காரர் ரோலண்ட் கிக்கிங்கர் சும்மா கும்முன்னு "கமாண்டோ" பட அர்னால்டு கணக்கா இருக்கார், அதுவும் அவர் சட்டை கழட்டி ஆர்ம்ஸ் காட்டுவார் பாருங்க!.. ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல! எனக்கு முன் வரிசையில் இருந்து இரு பெண்கள் இரகசியமாய் பேசிக்கொண்டு வெட்க்கப்பட்டு சிரித்தார்கள் ... என்ன பேசினார்களோ! ;-) பெண்களுக்கே வெளிச்சம் நமக்கு அரைகுறை வெளிச்சம் ;-)

பொன்வண்ணன் ஜெயம் ரவியை பற்றி நல்ல எண்ணம் கொண்டு இருந்தாலும் அவரது ஜாதியை வைத்து அவரை மட்டப்படுத்திக்கொண்டே இருப்பார். பழங்குடி மக்கள் என்பதால் அவர்களை மட்டமாக நடத்துவார். மாணவிகளின் பேச்சைக்கேட்டு இவரை படு கேவலமாக நடத்துவார். இவர் நல்லவரா கெட்டவரா என்பதே தெரியவில்லை! படத்தில் இவர் செய்வது மிக மிக குறைவு நிஜத்தில் இதை விட கேவலமாகவே நடந்து கொள்கிறார்கள்.


அதுவும் காடுகளில் அதிகாரிகளால் எத்தனை பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகிறார்கள் என்பதை கணக்கெடுத்தால் நோட்டு பற்றாது. நாயை விட கேவலமாக எவ்வாறு அந்த மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்பது பலர் அறிந்தது. இது பற்றி இன்னும் அழுத்தமான காட்சிகள் வைத்து இருக்கலாம் எனென்றால் படமே அதை மையப்படுத்தி தானே!

படத்தில் பல அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்தும் படி காட்சிகள் வரும், அது பற்றி ஜெயம் ரவி விளக்கம் கொடுப்பது அருமை, அது பற்றி அவர் தெரிந்து இருப்பதில் இருக்கும் உறுதியை அல்லது நம்பகத்தன்மையை அவர் பேச்சு கொடுக்கும். ஆனால் அவர் சண்டையின் போது இயந்திர துப்பாக்கியை பயன்படுத்தும் விதம் ரொம்ப மோசமாக இருக்கும், என்ன மாறினாலும் நம்ம தமிழ் படங்களில் இது மாறாது போல இருக்கு. சண்டையின் போது வில்லன்கள் துப்பாக்கி வைத்து இருந்தும் இவர்களை சுடாமல் ஓடுவது ஏனோ!

ஜெயம் ரவியிடம் இருந்து ஜீப்பை இந்த பெண்கள் எடுத்து (பிடுங்கி) செல்ல அது தாறுமாறாக சென்று மலையில் இருந்து கீழே விழுந்து விடும், ஆனால் ஜெயம் ரவி எந்த அதிர்ச்சியையும் காட்டாமல் எதோ! டிபன் பாக்ஸ் கீழே விழுந்தது போல சரி! இனி கவனமாக இருங்கள்! என்று கூறி விடுவார், நம்பும்படி இல்லை.

நகரம் அதை சார்ந்த படங்களையே அனைத்து படங்களிலும் பார்த்து இருந்த அனைவருக்கும் ஒரு காட்டை அது பற்றிய செய்திகளை பார்த்தது ஒரு புது அனுபவம், இதில் காட்டை பற்றி விலங்குகளை பற்றி பல புதிய விசயங்களை தெரிந்து கொள்ளலாம். ஜனநாதன் சார்! இதை போல படத்தை கொடுத்து இரட்டை அர்த்த வசனங்களை ஏன் வைத்தீர்கள்? படத்திற்கு கரும்புள்ளியே இது தான். பல இடங்களில் படம் ஊமையாகவே உள்ளது. பொன்வண்ணன் ஜெயம் ரவியை கிண்டலடிக்கும் போதும் படம் மௌனம். இடைவேளை வரை (பெண்கள் ஜெயம் ரவியின் திறமையை உணரும் வரை) பல இடங்கள் பேச்சில்லாமல் உள்ளது.


படத்திற்கு பெரிய பலமே ஜெயம் ரவி தான் என்பது என் கருத்து. அதிகாரி வேடத்திற்கு தன்னை தேர்வு செய்ததை நியாயப்படுத்தும் விதமாக எந்த பெரிய குறையும் சொல்லிவிட வாய்ப்புக்கொடுக்காமல் சரவெடியாக நடித்துள்ளார், குறிப்பாக எந்த ஒரு ஓவர் நடிப்பும் செய்யாமல் இயக்குனரின் நடிகராக நடித்துள்ளார். ஒரு சாதாரண நேர்மையான அதிகாரி தன் அதிகார எல்லை அறிந்து செய்வதை இதில் அப்படியே பிரதிபலித்துள்ளார் என்றால் மிகையில்லை. தான் சராசரி கதாநாயகன் (பொருத்தமில்லா வசனங்கள் பேசுவது) என்பதை எந்த இடத்திலும் அவர் காட்டவில்லை இதில் ரவி மற்றும் இயக்குனர் இருவருக்குமே பங்குண்டு. இந்தப்படம் இவருக்கு திரைவாழ்க்கையில் முக்கியமான படம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

கதாநாயகி கூட இல்லாமல் உண்மையான வித்யாசமான கதை களத்துடன் படத்தை கொடுத்த ஜனநாதன் அவர்களுக்கு பாராட்டுகள், படத்தில் குறைகள் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அதை எல்லாம் பெரிது படுத்தாமல் படத்தை நாம் பாராட்டவில்லை என்றால் இனியும் இதை போல படங்களை எடுக்க முயற்சி செய்ய மாட்டார்கள் (நம்மாளுக தான் ஒரு படத்தையும் விட மாட்டேங்கறாங்களே மொக்கை சொத்தைனு கிண்டல் விமர்சனம் போட்டுடறாங்களே). பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது, குறைகூறும் அளவில் எனக்கு எதுவும் தோன்றவில்லை.

கடைசியில் கஷ்டப்படுறவன் ஒருத்தன் பெயர் வாங்குபவன் இன்னொருத்தன் என்பதை காணும் போது கண்கலங்கியது. "பேராண்மை" என் பார்வையில் சிறந்த படமே!


நடிப்பு: ஜெயம் ரவி, பொன்வண்ணன், வடிவேலு, ரோலண்ட் கிக்கிங்கர், ஊர்வசி
இசை: வித்யாசாகர்
ஒளிப்பதிவு: சதீஷ் குமார்
இயக்கம்: எஸ்பி ஜனநாதன்
தயாரிப்பு: ஐங்கரன் இன்டர்நேஷனல்

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்